தமிழகத்தில் ரயில் கட்டணத்தை விட அரசு பஸ் கட்டணம் கடும் உயர்வு

சென்னை: தமிழக அரசு நேற்று அறிவித்த பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து, ரயில் கட்டணத்தை விட அரசு பஸ்களின் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்து வருவோர் காசை மிச்சம் பிடிக்க இனிமேல் ரயி்ல்களை அதிகம் நாடும் நிலை உருவாகும் என்று தெரிகிறது.

தமிழக மக்களுக்கு நேற்று மாலை அதிர்ச்சி வைத்தியம் அளித்தது அரசு. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு மற்றும் விரைவில் மின் கட்டணமும் உயரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது மக்களை மலைப்படைய வைத்துள்ளது.

ஒரே நேரத்தில் இத்தனை உயர்வுகளையும் அரசு அறிவித்ததால் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர்.

நேற்றைய பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து தற்போது ரயில் கட்டணத்தை விட அரசு பஸ் கட்டணம் அதிமாகியுள்ளது.

ஒரு அரசு விரைவுப் பேருந்தின் கட்டணத்தை எடுத்துக் கொண்டால், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்குப் போகும் ரயில்களில் தூங்கும் வசதியுடன் கூடிய 2ம் வகுப்புப் பெட்டிக்கான கட்டணத்தை விட குறைந்தது ரூ. 19 மற்றும் அதிகபட்சம் ரூ. 87 வரை அதிகரித்துள்ளது.

உதாரணத்திற்கு சென்னையிலிருந்து ஒருவர் மதுரை போக வேண்டுமென்றால் ரயில் கட்டணம் ரூ. 232 தான். அதுவே அரசு பஸ்ஸில் போக வேண்டுமென்றால் அவர் ரூ. 275 செலுத்த வேண்டும். கன்னியாகுமரிக்குப் போக வேண்டுமென்றால் ரயில் கட்டணம் ரூ. 305தான். அதுவே அரசு பஸ்ஸாக இருந்தால் கட்டணம் ரூ. 496 ஆகும்.

முன்பு அரசு பஸ்களில்தான் ரயில் கட்டணத்தை விட டிக்கெட் விலை குறைவாக இருந்தது. தற்போது ரயில் கட்டணத்தை விட அரசு பஸ் கட்டணம் அதிகரித்து விட்டது.

இது அரசு பஸ்களின் கதை. ஆம்னி பஸ்களின் கட்டணம் ஏற்கனவே விண்ணைத் தொட்டு நிற்கிறது. அரசு பஸ்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் தங்களது கட்டணத்தை உயர்த்தும் என்பதால் மக்கள் பாடு திண்டாட்டம்தான்.