நெல்லை: நெல்லையில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர் முத்தையாசாமி என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நெல்லை, கடையநல்லூர் யூனியன் நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையாசாமி(46). கடையநல்லூர் மக்கள் நலப் பணியாளராக பணியாற்றியவர். தமிழக அரசு 13,500 மக்கள் நலப் பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்தபோது முத்தையாசாமியும் வேலை இழந்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த முத்தையாசாமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் மன அழுத்தம் அதிகரித்து மாரடைப்பால் இறந்தார்.
இது குறித்து முத்தையாசாமியின் மகள் பாலசண்முகத்தாய் கூறியதாவது,
வேலை பறிபோனதால் இனி குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று அப்பா மனவருத்தத்திலேயே காணப்பட்டார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் அப்பாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இனி நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார்.
இறந்த முத்தையாசாமிக்கு ஆனந்தி என்ற உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி உள்ளார். முத்தையாசாமியின் இறப்பு குறித்து அறிந்த தென்காசி பகுதி மக்கள் நலப் பணியாளர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
kadayanallur